அண்ணியின் பாட்டு
எனது சொந்த ஊரில் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போது அந்த வழியாக வந்த முதியவள், யார் நீங்கள் என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். இதுபோல, கிராமங்களில் நமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் கூட என்னவென்று விசாரிப்பார்கள்.
இந்த இடத்தை சுத்தம் செய்து அதில் ஒரு ஷெட் போடலாம் என இருக்கிறேன் என்றேன். அதுவும் சரி யாராவது தங்கி கொள்வார்கள் என்றாள். சரி நீ யாரு உன்னை பார்த்த மாதிரி இல்லை.
நான் போலீஸ்காரர் மகன் என்றேன்.
ஆயி! நல்லா இருக்கியா? மூத்ததா? , நல்லதா?இல்ல சின்னதா?
நான் நல்லவன்.
அதற்குள் ஒரு கூட்டம் கூடி விட்டது. நலம் விசாரிப்புகள்.
நான் யார் என்று தெரியுதா?
தெரியும், ஜெயராமன் அண்ணன் மனைவி என்றேன்.
அந்த அண்ணிக்கு ஒரே சந்தோசம், என்னை இது இன்னும் நினைவில் வைத்து கொண்டு இருக்கிறது.
நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்றேன். உன் அண்ணன் தான் விட்டுவிட்டு போய் விட்டது. மூணு பொண்ணையும் கட்டி கொடுத்து விட்டேன். ஒரு கை அரிசி போட்டு பொங்கி காலத்தை ஓட்டுகிறேன்.
ஒரு தனி மனுஷியாய் இவ்வளவு பெரிய வேலையை செய்து விட்டு, ஏதோ கண்ணை மூடி திறந்தது போல சொல்கிறாள்.
நீ சிறுவயதில் என்னிடம் என்ன கேட்பாய் என்றாள்.
பாட்டு பாட சொல்வேன். அண்ணி சத்தமாய் சிரித்தாள். அதற்குள் வேறொரு பெண் நீ இப்போ பாடாத உனக்கு வயது ஆகிவிட்டது. நான் பாடுவேன், நான் பாடிக்கொண்டே இருப்பேன், என் கொழுந்தனுக்காக நான் பாடிக்கொண்டே இருப்பேன் என்று சொல்லிவிட்டு மன்னவனே அழலாமா? கண்ணீரை விடலாமா? ( கற்பகம் படத்தில் வரும் பாடல்) என்று அழுது கொண்டே பாடி முடித்து விட்டு, உங்க அம்மா நினைத்து பாடினேன்.
நீங்கள் இறந்த பின்பு உங்களை நினைக்கும் போது அழுதால் அவர்கள் புண்ணியம் செய்து விட்டு போய் இருக்கிறார்கள் என்று அர்த்தம். பாப்லோ நெருதாவைப் போல பேசுகிறாள், ஆச்சரியப்பட்டு போனேன் ஆனால் நாங்கள் தான் இந்த பெண்களை எல்லாம் வெளி உலகத்தை காட்டாமல் அமுக்கி விடுவோமே.
உங்களுக்கு முதல் குழந்தை பிறந்த போது அண்ணன் கேரளாவில் வேலை செய்து கொண்டு இருந்தார். தஞ்சாவூரில் மருத்துவமனைக்கு நானும் அம்மாவும் வந்தோம், அது தான் எனக்கு, முதல் பெண்கள் பிரசவ வார்டுக்குள் நிழைந்தது. ஏகப்பட்ட குழந்தைகள் தூங்கி கொண்டு, அழுது கொண்டு இருந்தார்கள். நான் ஒவ்வொரு கட்டிலுக்கும் சென்று குழந்தைகளை பார்த்து கொண்டு இருந்தேன்.
நாங்கள் வீடு திரும்பும் வழியில் ஒரு ஹோட்டலுக்கு சென்று எனக்கு சாப்பாடு தர சொல்லிவிட்டு, நான் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டு இருந்தாள். அம்மாவிடம் என் அப்பளத்தை உடையாமல் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்தேன். இப்போது ஒரு கையில் அப்பளம், ஒரு கை அம்மாவின் கைகளுக்குள் அகப்பட்டுகொண்டும், ஏ்ன் அம்மா சாப்பிடவில்லை என்று தெரியாமல் தஞ்சாவூரின் கடை தெருக்களில் இன்றும் நான் அங்கேயே திரிந்து கொண்டு இருக்கிறேன்.