ஒரு சின்ன ஆட்டம்
பள்ளிவிட்டவுடன் நான் நேராக வீட்டுக்கு தான் செல்வேன். எனக்காக என் அம்மா காத்துக் கொண்டிருப்பாள். எனக்கு ஏதாவது தின்பண்டங்கள் தயாராக இருக்கும். அம்மா இதை கேளேன் என்று அன்று பள்ளியில் நடந்தவகளை சொல்லிக்கொண்டே இருப்பேன். அவர்களை சொல்லி முடித்தவுடன் மீண்டும் முதலிலிருந்து சொல்வேன். அம்மா இடையிடையே சிரித்து வைப்பாள். என் வீட்டில், சிறிது நேரம் வெளியில் விளையாட விடுவார்கள். நான் என் அம்மாவிற்கு ஏதாவது சமையலுக்கு உதவியாக இருப்பேன். காய்கறிகள் வெட்டி தருவது, துணிகளை மடித்து வைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகள் செய்வேன். பள்ளிக்கு அருகிலேயே வீடு அமைந்ததால் உணவு இடைவேளையின் போது வீட்டிற்கு வந்து உணவு உண்டு போவேன். என் அம்மா நன்றாக சமைப்பாள். அப்பா மத்திய அரசு பணியில் வேலை பார்த்து வருகிறார். அக்கா நந்தினி கல்லூரியில் படித்து வருகிறாள். ஜீவா என்று எனக்கு பெயர் வைத்திருந்தார். நானும் அக்காவும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளும் பழக்கம் எல்லாம் எங்களுக்கு சுத்தமாக கிடையாது. இரண்டு பேரும் சேர்ந்தே இருப்போம். என் அக்கா நன்றாக நடனம் ஆடுவாள். அவளிடம் கேட்டு நானும் கொஞ்சம் கொஞ்சமாக நடனம் ஆடுவேன். தொலைக்காட்சியில் வரும் பாடல்களுக்கு ஏற்றார்போல் அசைவுகளை சொல்லித் தருவாள். நான் அதை அப்படியே ஒரு சில முயற்சிகளில் கற்றுக்கொள்வேன். என்னுடைய நண்பன் சங்கர், தன் வீட்டிலிருந்து தின்பண்டங்கள் எடுத்து வந்து எனக்கு தருவான். நானும் அவனுக்கு தருவேன். எங்கள் வீட்டில் செய்யப்படும் தின்பண்டங்களை முதலில் அவன் வீட்டுக்குச் சென்று கொடுத்து வருவேன். எங்கள் வீட்டில் நான்கு மாடுகள் இருந்தன. வேல் என்பவர் மாடுகளையும் எங்களின் விவசாய நிலங்களையும் பராமரித்து வந்தார். வேலின் வீடும் சங்கரின் வீடும் அருகருகே இருந்தது. மாடுகளை அருகில் இருக்கும் குளத்தில் வேல் கழுவுவது வழக்கம் நானும் சங்கரும் அப்போது குளித்து மகிழ்வோம். அந்த குளத்தின் ஆகாயத் தாமரைகள் படர்ந்து பச்சை பசேலென்று இருக்கும். வேல் எங்கள் குடும்பத்தில் அனைவரிடமும் நன்றாக பழகுவார்.
சங்கரும் நானும் முதல் இரண்டு ரேங்க் எடுக்கும் மாணவர்கள் ஆகையால் பள்ளியில் ஆசிரியருக்கு மிகவும் பிடிக்கும். பள்ளியில் நடைபெறும் விழாக்களில் நானும் சங்கரும் சேர்ந்து சினிமா பாட்டுக்கு நடனம் ஆடுவோம். அன்று பள்ளியில் ஆண்டு விழா நந்தினியிடம் நான் நடனம் ஆடுவதாக சொல்லி இருந்தேன். நந்தினியும் என்னுடன் பள்ளிக்கு வந்து இருந்தால் பின்பு ஏனோ எங்கள் நடனம் சாயந்திரம் என்றதும் பிறகு வருவதாக சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றாள். நான் ஒத்திகை முடிந்து மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றேன். என் அம்மாவும் அத்தையும் ஒரு அறையில் அழுதுக் கொண்டிருந்தார்கள். ஏன் அழுகிறீர்கள்! என்றேன் ஆனால் பதில் இல்லை. எனக்கு பசி, சமையல் அறைக்கு சென்று தட்டில் சோறு போட்டு வரை சென்றேன். என் அக்காவை சமையல் அறையில் தரையில் கிடத்தி ஒருவன் இரண்டு கால்களையும் கோர்த்துப் பிடித்திருந்தான். மற்றொருவன் ஒரு கையையும், தாத்தா ஒரு கையையும், என் தாத்தாவின் நண்பர் நந்தினியின் மேல் அமர்ந்து கட்டாயப்படுத்தி அவள் வாயில் ஏதோ ஊற்றினான். என்னை பார்த்ததும் தாத்தா, தேவிடியா முண்டை எங்கடி போன! இவன கூட்டிட்டு போ! என்று என் அம்மாவைத் திட்டினார். உடனே பின் வாசல் வழியாக அப்பா வந்தார். அப்பாவிடம் சொல்லி இவர்களை அடி அப்பா, வெளியில் போகச் சொல் இவர்கள் அக்காவை அடிக்கிறார்கள் என்றேன். என் அப்பா என் வாயை மூடி என்னை மற்றொரு அறைக்கு கூட்டிச் சென்றார். நான் அப்பொழுது திரும்பி என் அக்காள் நந்தினியை கடைசியாக பார்த்தேன். அவள் கால்களை உதைத்து திமிறிக்கொண்டிருந்தாள். தாத்தாவின் துண்டால் அவரின் நண்பர் அக்காவின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்தாள் அப்பா என்னுடன் அழுது கொண்டு இருந்தார். சிறுது நேரத்தில் தாத்தா வந்தார், எவ்வளவு நேரம் அழுது கொண்டிருப்பது ஆகவேண்டியதை பாரு என்றார். அடக்கம் செய்ய எல்லோரும் வந்தார்கள் சென்றார்கள். அம்மா நந்தினியை நினைத்து அழுது கொண்டிருந்தாள். அதற்கு அத்தை, விடுங்க! நீங்க இப்படியே எத்தனை நாட்கள் தான் அழுது கொண்டிருப்பீர்கள். ஜீவாவைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு ஊருக்கு சென்றாள்.
நான் ஒரு ஒரு மாதத்திற்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடப்பது ஒரு மாதிரியாக இருந்தது ஆகையால் சங்கர் வீட்டுக்கு சென்றேன். அவனிடம் எல்லாவற்றையும் கூறி கட்டி அழுதேன். அவன் நந்தினியும் வேலுவும் விரும்பி இருக்கிறார்கள் ஆகையால் உங்கள் அக்காவை அடித்து இருக்கிறார்கள் என்று ஊரில் பேசுவதாக சொன்னான். அவனின் அணைப்பு எனக்கு மிகவும் இதமாக இருந்தது. ஏன் ஒருவரை ஒருவர் விரும்ப கூடாதா? என்றேன். அதற்கு சங்கர், வேலு ஏழை அது மட்டுமல்ல உங்களிடம் வேலை பார்ப்பவன். ஏன் நாம் ஒருவரை ஒருவர் விரும்பவில்லையா? என்றேன். அது வேற! இது வேற! என்றான். நான் உன்னை விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு காத்திருக்காமல் வீடு வந்தேன். அம்மா இரவு உணவு தந்தாள். மள மள வென்று அள்ளி சாப்பிட்டு அக்காளின் அறைக்கு சென்று அவளின் பாவாடையை அணிந்து கொண்டு தாவணியால் போர்த்திக் கொண்டு தூங்கிவிட்டேன். வீட்டிலும் யாரும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக பேசுவதில்லை. நான் முழுநேரமும் அக்காவின் ஏதாவது மேல் சட்டை, பாவாடையை அணிந்து கொள்வேன். அவளின் அறையிலேயே அடைந்து கிடந்தேன். சங்கர் வீட்டுக்கு செல்லாததால் என்னைப்பார்க்க என் வீட்டிற்கு வந்தான். ஒரு நிமிடம் என்னை பார்த்து டேய்! என்று திடுக்கிட்டு பின்பு என் கைகளைப் பற்றிக்கொண்டான். அவனுக்கு என்னை புரிய வைத்தேன். நான் உன்னை விரும்புகிறேன், உன்னுடன் வாழ விரும்புகிறேன், நான் பெண்மையாக உணர்கிறேன் என்றேன். எனக்கு புரிகிறது என்று என் தலையைத் தடவி விட்டான். சிலிர்த்து போனேன், அவளை கட்டி அணைத்துக்கொண்டு தூங்கினான்.
எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை வீட்டிற்கு செல்கிறேன் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி விட்டு என் கண்ணத்தில் முத்தமிட்டு சென்றான். நாளைக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்றேன். சரி என்றான். அவனது ஸ்பரிசமும் என் கூச்சமும் உணர்ச்சியும் நான் ஆண் இல்லை என்று உணர்த்திது. நான் மாறிக் கொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டில் இருப்பவர்கள் அக்காள் இறந்த சோகத்தில் இப்படி அவளின் உடைகளை உடுத்திக் கொண்டு இருக்கிறான் என்றே நினைத்தார்கள். பள்ளி விடுமுறை நாட்கள் ஆனதால் சங்கர் வீட்டுக்கு வருவதும் நாங்கள் வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பதும் சந்தோஷமாக இருந்தோம். அக்காவின் உடைகளை அணிந்து அவனுக்குக் காண்பிப்பேன். அவனும் ரசிப்பான். ஒருநாள் அம்மா கடைக்கு சில பொருட்கள் வாங்கி வரச் சொன்னாள் போகும் போது இந்த பாவாடையை கழட்டி போட்டு விட்டு உன்னுடைய சட்டையை மாட்டிக்கொண்டு போ என்றாள். அம்மா அடுத்த அறைக்குச் சென்ற உடன் நான் அணிந்திருந்த அக்காவின் உடையுடன் கடைக்குச் சென்றேன் அங்கு இருந்தவர்கள் என்னை கேலி, கிண்டல் செய்தார்கள். கடைக்காரர் கையை தட்டி தட்டி கூப்பிட்டார். நான் அழுது கொண்டே வீட்டிற்கு வந்தேன். நான் வரும்போது அப்பா வீட்டில் அமர்ந்து என்னைப் பார்த்தவுடன் கோபமாகி அதை கழட்டு என்று என்னை அடிக்க ஆரம்பிக்க நான் முடியாது. எனக்கு இந்த உடை பிடித்திருக்கிறது. நான் பெண்ணாக மாறி கொண்டிருக்கிறேன், எனக்கு பெண் உணர்வுகள் இருக்கிறது என்று அப்பாவிடம் மென்மையாக எடுத்துக் கூறி புரிய வைக்க முயற்சி செய்தேன். அப்பாவின் கோபம் தலைக்கேறி தனது பெல்ட்டை கழட்டி மூச்சு இறைக்கும் வரைக்கும் அடித்துவிட்டு, ஒரு நிமிடம் நீ இந்த வீட்டில் இருக்க கூடாது என்றார். அம்மா சிறிது நேரத்தில் எனது ஆடைகளை பையில் திணித்து வெளியே இழுத்துச் சென்று கிளம்பு என்றாள். நான் எங்கம்மா போவது என்று என் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. நீ! எங்காவது போ! ஆனால் இங்கு மட்டும் வராதே! என்று என் கையில் கொஞ்சம் பணத்தை திணித்து விட்டு உள்ளே சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள். அவள் கையில் திணித்த காசை அங்கேயே போட்டுவிட்டு சங்கர் வீட்டுக்குச் சென்றேன். சங்கர் வீட்டுக்கு சென்று கதவை தட்டியதும் கதவைத் திறந்தான். என்னை உள்ளே கூட்டிச் சென்றான். நடந்தவைகளை விலக்கினேன். சரி நீ! முதலில் சாப்பிட்டு படு காலையில் எதுவாக இருந்தாலும் பேசிப்போம் என்றான். சங்கரின் அம்மா என்னடா! இந்த நேரத்தில் சாப்பாடு எடுத்துட்டு போற? என கேட்க, அதற்கு அவன் ஜீவா வந்து இருக்கான். வீட்டில் சண்டை போல என்றான். அடப்பாவமே! என்று என்னை பார்க்க சங்கரின் அறைக்கு வந்தாள். அங்கு நான் அணிந்த ஆடையை பார்த்து அதிர்ச்சியாகி நீ என்னடா ஒம்போது
மாதிரி டிரஸ் பண்றே என்று கத்த ஆரம்பித்து விட்டாள். எனக்கு நடுத்தெருவில் அம்மணமாய் நின்றது போல நிலையில் இருந்தது. உனக்கு என் மகன் தான் கிடைத்தானா? இதுக்குத்தான் நீ இங்க வந்து அவனை மயக்கினியா? அவன இப்ப வெளியில போகச் சொல் இல்லனா எனக்கு கெட்ட கோவம் வரும் என்றாள். நான், சங்கரின் அம்மாவிடம் நெருங்கி, அம்மா நான் பெண்ணாக மாறி கொண்டிருக்கிறேன் என்றேன். அவள் என் மேல் சட்டையை பிடித்து வெளியே இழுத்தாள் . அதில் அவள் மேல் சட்டையின் முதல் பட்டன் தெறித்து கீழே விழுந்தது. நான் பையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினேன். ஜீவாவை பஸ் ஏத்தி விட்டு வருகிறேன் என்றான் சங்கர். அதற்கு அவள் அவனை திட்டுகிறாள்.என்னை சந்தித்து மன்னிச்சுடுடா! என்னால உனக்கு ஏதும் பண்ண முடியல என்று சொல்லி கையில் கொஞ்சம் பணம் தந்ததை வாங்கிக்கொண்டேன். நீ எங்க போற என்றான் சங்கர். எனக்கு தெரியல! பணத்துக்கு தேங்க்ஸ்டா! என்றேன். சங்கர்! நீ திரும்பிபார்க்காம வீட்டுக்கு போயிடு, எனக்கு உன்னை பார்க்க முடியல. நான் ஏதாவது ஆகி விடுவேன் போல இருக்கு என்றேன். சரி! சரி! என்று சங்கர் கிளம்பிவிட்டான்!
சங்கர் வீட்டுக்கு சென்றான். அவன் அம்மா, உனக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? என்றாள். மயிறு தொடர்பு போதுமா! பொம்பளையாமா நீ?, நீயே அவனை புரிஞ்சுக்கலைனா, அவனை யாரு புரிஞ்சிப்பா! என்றான். தம்பி! நான் பொம்பள அவ ஒம்போது, அலி என்கிறாள். இதுக்கு அப்புறம் ஏதாவது பேசினா அம்மான்னு கூட பார்க்க மாட்டேன் தூக்கி போட்டு மிதித்து விடுவேன் என்கிறான் சங்கர். மிதிப்படா மிதிப்ப, உங்க அப்பா செத்ததுக்கு அப்புறம் நான் உன்னை பொத்தி பொத்தி வளர்த்தேன் பாரு. அதற்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்கிறாள். எங்க அப்பன் பென்ஷன் வருது, வாய மூடு நாயே! என்று தனது அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொள்கிறான் சங்கர்.
திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்லும் பஸ்ஸில் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டேன். காற்று என் முகத்தில் வீசியது. களைப்புடன் இருந்ததால் தூங்கம் சொக்கியது. அப்படியே தூங்கி போனேன். சற்று நேரத்தில் குளிர ஆரம்பித்தது. எனக்கு குளிர ஆரம்பித்தவுடன் பையில் ஏதாவது இருக்கும் என்று பார்த்தேன். பிறகு இவங்க துணியே வேண்டாம் என்று பையை தூக்கி வெளியில் போட்டு விட்டேன். விடியற்காலையில் அசோக் பில்லரின் அருகே பேருந்து நின்றது. இறங்கி கடையில் டீ குடித்தேன், என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அப்போதுதான் நான் கவனித்தேன் மேல் சட்டையின் பட்டன் அறுந்து சட்டை விலகி என் மார்பு பகுதி வெளியில் தெரிந்து கொண்டிருந்தது. ஒரு கையால் கோர்த்துப் பிடித்துக் கொண்டேன். எங்கு போவது என்று தெரியவில்லை, அழுகையாய் இருந்தது, கண்ணைத் துடைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தேன். அப்போது காவல்துறை வண்டி மெதுவாக எனக்கு முன் நின்றுது. பின்னால் இருந்து ஒரு காவலர் இறங்கி என்னை விசாரித்துவிட்டு உயர் அதிகாரியிடம் சென்று சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை கடைசியாக புது ஐட்டம் என்றார். அவர் சரி வண்டியில் ஏற்று என்றார். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தரையில் உட்கார சொன்னார்கள். சிறிது நேரம் சென்று அந்த அதிகாரியின் அறைக்கு காவலர் கூட்டிச் சென்றார். அப்போது அவர் மேல் சட்டையை கழற்றி கொக்கியில் மாட்டி விட்டு பேண்ட்யை கழட்டி கொண்டிருந்தார். நான் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தேன். நீ பாட்டுக்கு நின்னுகிட்டு இருக்கிற நீ என்ன ஊர்?, உங்கப்பா பேர் என்ன? போன் நம்பர் எதாவது இருக்கா ? பக்கத்துக்கு போலீஸ் ஸ்டேஷன் பெயர் என்ன என்று விசாரித்துக் கொண்டே வேறு பேண்ட் எடுத்து மாட்டிக்கொண்டார்.
அப்போது நிம்மதி பெருமூச்சு விட்டேன். நான் வீட்டில் இருந்து துரத்தப்பட்ட விஷயத்தைச் சொன்னேன். அப்படியே நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு யாருக்கோ போன் செய்து பேசினார், சின்ன வயசு சீக்கிரம் வந்து கூட்டிட்டு போ! என்று துண்டித்தார். அடுத்த பத்து நிமிடத்தில் தூங்கி எழுந்த முகத்தோடு ஒருவள் என்னை கூட்டிப் போக வந்தாள். உங்கள் தொழிலில் இவளை விடாத படிக்க வை! என்றார். அந்த அம்மா தன் கையிலிருக்கும் பணத்தை அந்த அதிகாரியிடம் கொடுத்தாள். இதற்கு நான் பணம் வாங்கினால் என் பிள்ளைங்க நல்லா இருக்காது என்றார். அவரின் காலில் விழுந்து வணங்கி விட்டு, அங்கு வெளியில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி அந்த அம்மாவின் வீட்டுக்கு சென்றோம்.
அந்த அம்மாவின் பெயர் பாமா, பாலியல் தொழிலாளி. ஏற்கனவே பலமுறை கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தவள். பாமாவை நம்பித்தான் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள். பாமா என்னை பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள் பின்பு என்னை படிக்கச் சொன்னாள். என்னை கிண்டல் செய்வார்கள் என்று மறுத்துவிட்டேன். அவளின் வாழ்க்கை வித்தியாசமாக இருந்தது. இரவில் சென்று காலையில் வருவது, விடியற்காலையில் வருவது அல்லது இரண்டு நாட்கள் கழித்து வருவது. ஏதாவது வாங்கி வந்து தருவாள். அவளிடமிருந்து எந்த பொருளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள சொல்வாள். பாமா இப்போது என்னுடைய முழுமையான அம்மாவாக மாறி விட்டாள். பாமாவை வா! போ! என்று அழைக்கும் அளவிற்கு உரிமையை கொடுத்தாள். நான் அவளிடம் மெதுவாக எனக்கு பெண்மையாக மாறவேண்டும் என்று எனது நோக்கத்தை சொன்னேன். ஆபரேஷன் செய்துகொள்வது என்ற முடிவை சொன்னேன். தான் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் அவளின் கூட்டாளிகள் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு பெங்களூர் சென்று ஆபரேஷன் செய்து வந்தோம். வெகுவிரைவில் நான் உருவம் மாறி இருந்தேன். அறுவை சிகிச்சை முடிந்து நான் நார்மலாக இருந்தேன். அப்போது தான் நான் கண்ணாடியில் என்னை பார்த்தேன். மிகவும் அழகாக இருந்தேன். எனக்கு என்னை பிடித்து இருந்தது. சங்கரை பார்க்கணும் போல ஆவல் உண்டாயிற்று. சடங்கு செய்து பெயர் சூட்டு விழா நடந்தது. உனக்கு பிடித்த பெயர் இருக்கா? இல்லை நாங்கள் ஏதாவது பெயர் வைக்கட்டுமா என்றார்கள். சரிதா ஒரு பாலியல் தொழிலாளி. அவள் கணவர் பெயர் பாலு. சரிதா த்ரிஷா என்று பெயர் வைக்க சொன்னாள். பாலு நயன்தாரா என்று பெயர் வைக்க சொன்னார். பாமா உனக்கு பிடித்த பெயரை சொல் என்றாள் . இதுதான் என் அம்மா, என் விருப்பம்போல் செயல்படுவாள். நான் நதி என்றேன். ஓடிக்கொண்டேயிருப்பவள் என்றாள் சரிதா. என் அக்காள் நந்தினியின் நினைவாக நதி என்றேன். அதுமட்டுமல்ல நதி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அனைவரும் வாழ்த்திச் சென்றார்கள். அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அது ஒரு மழைக்காலம் பாமாவிற்கு உடல்நிலை சரியில்லை. அதனால் தொழிலுக்குச் செல்லவில்லை. அப்போதுதான் சாப்பாடு பெரிய பிரச்சினையாக இருந்தது. பாமா தான் சேமித்து வைத்திருந்த பணத்தை என் அறுவை சிகிச்சையின் போது செலவழித்து இருந்தாள். ஒரு நாள் மதியம் கடைக்கு சாப்பிட சென்றோம். எனக்கு உணவு ஆர்டர் செய்து விட்டு, அவள் ஒரு டீ ஆர்டர் செய்தாள். நீயும் சாப்பிடு என்றேன். பாமா பசிக்கவில்லை, வயிறு ஒரு மாதிரியா இருக்கிறது என்றாள். நான் சாப்பிட்டு முடித்தவுடன் சாப்பாட்டுக்கும் டீக்கு காசு கொடுத்துவிட்டு ஒரு ஹான்ஸ்( புகையிலை ) வாங்கி வாயில் அடக்கிக் கொண்டாள் பாமா. மீதி இருந்த பணத்தை என்னிடம் கொடுத்துவிட்டு அன்றும் தொழிலுக்கு போனாள். நான் எவ்வளவோ தடுத்தும் அவள் கேட்பதாக இல்லை. பாமாவின் கஸ்டமர்கள் வீட்டுக்கு வருவது உண்டு அப்படி வரும்போது அவர்கள் என்னையும் தொழிலுக்கு கூப்பிடுவார்கள். சிலர் நீ என்னுடன் வந்தால் சினிமாவில் அறிமுகப் படுத்துவேன் என்று ஆசைவார்த்தை கூறுவார்கள். பாமா அவர்களிடம் சண்டைக்குப் போவாள். ஒரு புரோக்கர் எதாவது தேவையாக இருந்தால் கூப்பிடு! என்று விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு சென்றார்.
நான் சமைத்து வைத்திருந்தேன் இருவரும் சாப்பிட்டோம். நீ இனி தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்றேன். அதற்கு நீ ஏதாவது புதையல் எடுத்தாயா? என்றாள் பாமா. தொழிலுக்கு நான் போகிறேன் என்றேன். பாமா என்னை அடித்தாள், கண்டபடி திட்டினாள். நான் உன்னை செல்லம் கொடுத்து வளர்த்து கெடுத்துவிட்டேன். இப்படித்தான் பேசுவாய் என்று சொல்லிவிட்டு இந்த தொழில் என்னோடு போகட்டும். நான் உனக்கு ஏதாவது தொழில் செய்ய ஏற்பாடு செய்து தருகிறேன் என்றாள் பாமா. எனக்காக இருந்த பணத்தை எல்லாம் செலவு செய்து விட்டாய். உன்னோடு நான் சண்டை போட விரும்பவில்லை என்று எனது அறைக்கு சென்று அங்கிருந்த புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்தேன். பாமாவுடன் பேசி இரண்டு நாட்கள் ஆயிற்று. நாங்கள் இருவரும் சாப்பிட்டு இருந்த நாட்கள் ஆயிற்று. பாமா, சரிதாவின் கணவரை அழைத்து வந்தாள். அவர் பாமாவின் நீண்டநாள் கஷ்டமரும் கூட. அவர் இருவரையும் மத்தியஸ்தம் செய்தார். அம்மா எவ்வளவு நாள்தான் கையை, காலை தூக்கி சம்பாதிப்பாள்? நான் சம்பாதிக்கிறேன், அவள் வீட்டைப் பார்த்துக்கொண்டு இருக்கட்டும் என்றேன். இவள தொழிலுக்கு அனுப்பிவிட்டு நான் எப்படி வீட்டில் இருப்பேன்? என்றால் பாமா. சரி! நீ என் வீட்டில் இருக்க வேண்டாம், நீயும் அவளுக்கு துணையாக போ! என்றார் பாலு. இதில் இருவருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. பாலுவிடம் பணம் கொடுத்து சரக்கு மற்றும் உணவு வாங்கி வரச் சொன்னாள் பாமா. இரண்டு ரவுண்ட் போட்டவுடன், நானே ஒரு கல் நெஞ்சக்காரி என்னை கவிழ்த்துவிட்டாள் என் மகள் என்றாள், பாமா. யார் கல் நெஞ்சக்காரி? அன்று போலீஸ்காரர் காலில் ஏன் விழுந்த என்றேன். அவர் கடவுள்! அவர் தான் உன்னை என்னிடம் ஒப்படைத்தார், நீ வந்த பிறகுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு நீயும் தான் கடவுள் என்றேன். நதியில் விளையாடி கொடியில் தலைசீவி அமைந்த இளந்தென்றலே என்று பாட்டுப் பாடினாள். நதி! நீ ரொம்ப அழகுடி, சின்ன வயசுல நானும் உன்னை மாதிரியே தான் இருப்பேன் என்றாள் பாமா. இப்படித்தான் தண்ணி அடித்தால் பாட்டு பாட ஆரம்பித்துவிடுவாள், முதல்ல இதை சாப்பிடு என்று நான்கு இட்லியை அவளுக்கு ஊட்டி விட்டு கொஞ்சம் தண்ணீர் கொடுத்து, பாடி முடித்துவிட்டு உள்ளே வந்து படு, மழை வருவது போல இருக்கிறது. நானும் பாலுவும் வீட்டுக்கு உள்ளே சென்று மது அருந்தினோம். நீ ஏன் வேறு ஏதாவது வேலை பார்க்கக்கூடாது? என்று என் தொடையில் கை வைத்தார். உனக்கு என் கூட படுக்கணும்னு ஆசையா இருக்கா இல்லையா? சின்ன வயசுல இல்ல, ஆனா இப்ப நீ சூப்பர் பிகர் என்றார். இதுதான் பிரச்சனை, நீங்கள் எங்களை அதுக்கு மட்டும் தான் படைத்திருக்கிறான் என்ற பொதுநினைப்பு இருக்கு. இந்த அடிப்படையே மாறணும். அம்மாவுக்கு வயசாயிடுச்சு! இனி நான்தான் அவளை பார்த்துக்கணும், நாளைக்கு புரோக்கர் வரச்சொல்லு, அப்புறம் எப்ப படுக்கலாம்? பாலு பல்லு தெரியுற மாதிரி சிரிக்கிறார். நானும் ரெடிதான், கையில பணம் இருந்தா வா! என்று அனுப்பி விட்டு அம்மாவிற்கு போர்வை போர்த்தி நானும் அம்மாவிடம் பிளாட்பாரத்தில் படுத்துக் கொண்டேன். பாலு நேராக வீட்டிற்கு சென்று குப்புற படுத்திருப்பார். இவர் எத்தனையோ முறை என் அம்மாவிடம் படுத்துவிட்டு பணம் கொடுக்காமல் செல்வார். சின்ன வயசில் இருந்தே பலமுறை தொட்டு பேசும் சாக்கில் தடவுவார். நதிக்கு தெரியும் எங்கு தேங்கி நிற்க வேண்டும், எங்கு பாய்ந்து செல்ல வேண்டும் என்று.
காலையில் புரோக்கர் வருகிறார், நான் எந்த ரோட்டிலும் போய் நிற்க மாட்டேன். கால் பண்ணி கூப்பிட்டால் வருகிறேன். நீ எதுவும் கமிஷன் எடுத்து கொள்ள கூடாது. நானே உனக்கு தருகிறேன். யாரும் வரலைன்னா ஒண்ணும் சோர்ந்து போயிடமாட்டேன், ரேஷன்ல அரிசி போடுறாங்க, பைப்ல தண்ணி வருது, கடையில உப்பு கிடைக்கிறது, அது போதும் எனக்கு. நாலஞ்சி சோத்தை அள்ளி வாயில் போட்டுட்டு போயி கிட்டே இருப்பேன். நீ ஏண்டி அப்படி வாழணும்? உனக்கு இட்லி கடை வைத்து தருகிறேன் என்றாள் பாமா. நீ வாய மூடு! ராத்திரியானா குடிச்சிட்டு பிளாட் ஆயிடற, இதுல பாட்டு வேற. இவளுக்கு எப்பவுமே என் குரலின் மேல் பொறாமை தான், பித்த உடம்பு, அதான் கப்புன்னு தூக்கி விட்டுடுது. நதி! மூஞ்சிய கழுவிட்டு கொஞ்சம் பவுடர் தூக்கலா போடு! போட்டோ எடுத்துக்கிறேன் என்றார் புரோக்கர். அதன்பின் புரோக்கரிடம் இருந்து எனக்கு நிறைய ஆர்டர்கள் குறிப்பாக எல்லா வார இறுதியும் நான் பிஸி. என் அம்மா பாமாவை நல்ல முறையில் பார்த்து வந்தேன். வீட்டில் சமைத்து வைத்து விட்டு பகலில் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்து அழுவாள். ராத்திரியானால் குடித்துவிட்டு என்னை நினைத்து புலம்பல் மற்றும் பாட்டுப் பாடிக்கொண்டு பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிவிடுவாள்.
இந்த வாரம் கொடைக்கானல் உன்னுடன் ஒருத்திய கூட்டிட்டு வெள்ளிக்கிழமை மதியம் மூன்று மணிக்கு கத்திப்பாரா ஜங்ஷன்ல நில்லுங்க, அவங்க காரில் வந்து உங்களுக்கு கால் பண்ணி கூட்டிட்டு போவாங்க என்றார் ப்ரோக்கர். நான் ஒருத்தியை ஏற்பாடு செய்தேன். அவளும் மூன்று மணிக்கு கத்திப்பாரா வருகிறேன் என்றாள். வெள்ளிக்கிழமை நான் சென்று காத்திருந்தேன் அவளைக் காணோம், நான் போன் செய்தேன் உடம்பு சரி இல்லை வேறு யாரையாவது பார்த்து ரெடி பண்ணு, சாரிடி என்றாள். அதுக்குள்ள இவனுங்க வந்துட்டானுங்க, இந்த வேலைக்கு மட்டும் கரெக்டா வந்துடுவாங்க, நடந்ததை சொன்னேன். முன்னாடியே சொல்லி தானே வச்சேன். உங்களுக்கு என்ன அவ்வளவு கிராக்கியா? என்றான். அவளுக்கு உடம்பு சரியில்லை என்றேன். முதல்ல காரில் ஏறு. நான் ஏறிய உடன் உனக்கு ரெண்டு பேருக்குள்ள பணம் தரேன் நீ நல்லா கம்பெனி குடுக்கணும் என்றான் சதீஷ். யப்பா சாமி! நீ குறைச்சு குடுத்தாலும் பரவாயில்லை. தயவுசெய்து சத்தம் போடுறத நிறுத்து. அவளை தொந்தரவு பண்ணாத! என்றான் மற்றொருவன் கணேஷ். சதீஷ் தப்பா எடுத்துக்காத! என்று கன்னத்தை தடவினான். ஆம்பளைங்க, பொண்ணுங்க பின்னாடியும் பணத்தின் பின்னாடியும் சுத்துனா அசிங்கமா இருக்கும். கணேஷ் பொறுமையாக வண்டி ஓட்டிக் கொண்டே சிரித்தான். சதீஷ் ஏதாவது சேட்டை கொடுத்துக் கொண்டே, எனக்கு தரவேண்டிய பணத்தை கொடுத்தான். வண்டியை நிறுத்தி தேவையான மதுபாட்டில்களை வண்டியில் வைத்துக் கொண்டார்கள். வழியில் சதீஷ் குடித்துக் கொண்டே வந்தான். இரவு உணவு வாங்கித் தந்தார்கள். நல்ல சுவையாக இருந்தது. சிலர் அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் இருக்கும் மீதி உணவையும் சேர்த்து சாப்பிடச் சொல்வார்கள் என்னமோ நான் குப்பை கூடை மாதிரி. கொடைக்கானலுக்கு வந்து சேர்ந்ததும், அங்கு ஏற்கனவே முன்பதிவு செய்த அறையை சென்றோம் . உடம்பு களைப்பாய் இருக்கு தூங்குவோம் காலையில பார்ப்போம் என்றேன் ஆனால் இவர்கள் விட மாட்டார்களே என ஆடையை அவிழ்த்து கட்டிலில் தள்ளி விட்டான் சதீஷ். பிறகு குடிக்கக் கொடுத்தான். காலையில் எழுந்தேன். காலையில் சீக்கிரம் எழுவது எனக்கு சிறுவயது முதல் பழக்கம் அதை நான் மாற்றிக் கொள்ளவில்லை. அந்த அறை முழுக்க ஒரே சிகரெட் புகை, சாராய வாடை ஆங்காங்கே கழட்டி வீசப்பட்ட ஆணுறைகள். நான் குளித்துவிட்டு ஆடை மாற்றிவிட்டு அவர்களின் தூக்கத்திற்கு தொந்தரவு இல்லாமல் போனை ஆப் செய்து சார்ஜில் போட்டுவிட்டு வெளியில் கிளம்பினேன். அப்படியே நூறு மீட்டர்கள் இருக்கும் அங்கு விற்கும் பொருட்களை வேடிக்கை பார்த்தவாறு சென்றேன். அங்கே கணேசும் சதீஷும் நான் இல்லாததைக்கண்டு, எனக்கு போன் செய்து இருக்கிறார்கள். என் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வரவும், அவள் நம்மை ஏமாற்றி விட்டாள் என்று நினைத்து, என்னை தேடி கணேஷ் வருகிறான். சதீஷ் அறையிலேயே இருக்கிறான். நான் துணிக்கடையில் தொங்கவிட்டு இருக்கின்ற சேலையைப் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னை யாரோ பார்ப்பது போல இருந்தது. யாரென்று திரும்பிப் பார்க்கிறேன். என் அம்மா, திருச்சியில் என்னை துரத்தி அடித்தது அவள்தான். என்னை அடையாளம் காண்பதில் சிரமப்பட்டாள். நானே அருகில் சென்று அறிமுகம் செய்து கொண்டேன். அவள் கண்களில் பொல பொலவென்று கண்ணீர் கொட்டியது. அந்த இடத்தின் கண்ணியம் கருதி வாய் விட்டு அழாமல் கண்ணைத் துடைத்துக் கொண்டு நின்றாள். என் கையைப்பற்றி எங்கடி சொல்லிக்காம நீ பாட்டுக்கும் கிளம்பிட்டாயோ? நீ முன்னாடியே பணம் வாங்கும் போதே நினைச்சேன். இதுமாதிரி செய்வாய் என்று இழுத்தான் கணேஷ். அவள் அம்மா டேய்! அவளின் கையை விடு என்று பிரித்து விட முயல்கிறாள். ஓ! நீயும் இவள் கூட தொழில் செய்றவ தானா? ஏற்கனவே ரெண்டு பேருக்கும் பணம் கொடுத்துவிட்டேன், நீயும் வாடி என்று என் அம்மாவின் கையைப் பற்றி இழுக்கிறான். என் அம்மா கையை பின்னால் இழுக்க, நான் அவன் கையை விளக்கினேன். கைபிடி விலக அவள் ரோட்டில் கீழே விழுந்தாள். அப்போது எனக்கு எங்கிருந்து ஆவேசம் வந்தது என்று தெரியவில்லை ஓங்கி அவன் முகத்தில் அறைந்தேன். கீழே விழுந்தவன் தொண்டையை குறிவைத்துக் கடிக்கப் பாய்ந்தேன். அதற்குள் அவன் சுதாரித்து விட நெற்றியில் கடித்து காயத்தை ஏற்படுத்தினேன். அக்கம்பக்கத்தில் உள்ளோர் சண்டையை விலக்கி அவனை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். என் அம்மா என்ன ஆச்சு உனக்கு என்றாள்? மயிறு ஆச்சு போதுமா? என் வாழ்க்கையை பாழ்படுத்திவிட்டு , இப்ப வந்து என்ன ஆச்சுன்னு கேட்டுகிட்டு. இப்போ ஒரு விபச்சாரி, உன் கைய புடிச்சு இழுத்தானே அவன், என்னோட கஸ்டமர். ரெண்டு நாளைக்கு புக் பண்ணிட்டு கூட்டிட்டு வந்திருக்கான், நீ போய் உன் வேலையை பாரு என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்றேன். நான் அறைக்குள் நுழைந்தவுடன் எங்க போன நீ? சிரித்துக் கொண்டே எங்களை விட்டுட்டு நீ போயிட்டேன்னு கணேஷ் உன்னைத் தேடித்தான் போனான் ஆனால் அவன் போனதுக்கப்புறம் தான் பார்த்தேன் உன்னுடைய பை, போன் இங்கதான் இருக்கு. அது சரி, ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறாய் என்றான். கணேசை அடித்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டே அருகில் இருந்த மது பாட்டிலில் இருந்த சரக்கை ஊற்றிக் குடித்தேன். பின் நடந்தவைகளை அவனிடம் எடுத்துச் சொன்னேன். அது எப்படிடா என் முன்னால் என் அம்மாவை படுக்கை கூப்பிடுகிறார்கள் என்று அழுதேன். சரி! சரி! மன்னிச்சிடு நடந்த தவறுக்கு. அவனுக்கு நிறைய அடியா? என்றான். அடி எல்லாம் ஒண்ணுமில்லை, ஒரே ஒரு கடி தான் என்றேன். சரி வா! போய் அவனை அழைத்து வருவோம் என்று கூறினேன். நான் நல்ல போதையில் இருந்தேன். சதிஷ் கணேஷிடம் விசாரித்து அவன் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றோம். மூன்று தையல்கள் போடப்பட்டு, ஊசி போட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்க மருத்துவர் சொல்லி இருக்கிறார். ஒரு அறையைக் காட்டி அந்த அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாக ரிஷப்ஷனிஸ்ட் சொன்னார். அந்த அறையில் என் அம்மாவும் உட்கார்ந்து இருந்தாள். என்னை பார்த்தவுடன் கணேஷ் அழுதான். சாரி! என்னை மன்னித்து விடு! என்றான். உன் நிலமைக்கு நான் தான் காரணம் நீ என்னோடு இருந்திருந்தால் உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்றாள். நான் குறுக்கிட்டு, நந்தினி அக்காவை கொன்ற மாதிரி என்னையும் கொன்று இருப்ப! என்றேன். நான் இருந்த போதையின் நிலைமை தெரிந்து என்னை ஹோட்டலுக்கு கூட்டிப் போகச் சொன்னான், கணேஷ். நாங்கள் இருவரும் ஹோட்டல் அறைக்கு வந்து குடித்துக் கொண்டிருந்தோம். கணேஷ் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தான். மூவரும் சேர்ந்து குடித்தோம். ஒருத்தருக்கு ஒருத்தர் பேசவில்லை, நான் கணேஷிடம் சாரி என்றேன். என் அம்மாவின் கைகளைப் பற்றி இழுத்தவுடன் எங்கிருந்து இப்படி ஒரு கோபம் வந்தது என்று தெரியவில்லை என்றேன். நீ போய் சாரி கேட்டுட்டு நான் தப்பாக நடந்து கொண்டு விட்டேன் என்றான் கணேஷ். அன்றைய பொழுது அப்படியே இப்படியே சென்றது. சரி வாருங்கள் வெளியே போவோம் என்று அவர்களை வெளியில் கூட்டி சென்றேன்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கேம்ப் ஃபயர் ஏற்படுத்தி ஆடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அருகே நின்று கொண்டிருந்தோம். அங்கிருந்த ஒருத்தி என்னை நோக்கி இதுங்க நல்லா ஆடும், கொஞ்சம் பணம் கொடுத்து ஆட சொல்லுங்க! என்று சொன்னது என் காதில் நன்றாக விழுந்தது. என்னிடம் ஒருத்தர் வந்து பணம் கொடுத்தார். அதற்கு கணேஷ், நீங்கள் நினைப்பது போல் இல்லை, அவள் ஆட மாட்டாள். நிறைய குடித்து இருக்கிறாள்.நான் காதில் கேட்கவில்லை கையை தட்ட ஆரம்பித்தேன். இதுவரை காது கேட்காமல் இருந்த ஜென்மங்களின் காதுகளுக்கு விழவேண்டும் என்று கையை தட்டினேன், திருநங்கையாக பிறப்பது குற்றமல்ல என்று பெற்றோரின் காதுகளுக்கு கேட்கும் படியாக கை தட்டினேன், பள்ளியில் படிக்கும் போது கூடவே படிக்கும் மாணவர்கள் அடிக்கும் கிண்டலும் கேலியும் நிறுத்தச் சொல்லி கையை தட்டினேன். பேருந்துகள், இரயில் வண்டிகளில் செல்லும்போது ஒம்போது ஒம்போது என்று கூப்பிடுவீர்களே! உங்கள் காதுகள் செவிடாகும் தட்டுவேன். மற்ற நாடுகளெல்லாம் கணிசமான வேலைவாய்ப்பினை எங்களுக்கு உருவாக்கித் தரும் போது நீங்கள் எங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கும் கல்விக்கும் வேலை வாய்ப்புக்கு உறுதி செய்யும் விதமாக எந்தவிதமான முன்னேற்றத்துக்கும் உதவாத அரசியல் மூளை கலங்கி மூக்கின் வழியாக வழியும் வரை கையை தட்டுவேன். நெருப்பை சுற்றி சுற்றி ஆடினேன். ஆண்டு ஆண்டுகளாக எங்களின் எல்லா துளைகளிலும் கொட்டப்பட்ட தீப்பொறிகள் இன்று என்னை தீப்பிழம்பாய் அக்கினி ஆலமரமாய் ஆக்கிவிட்டது. என் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கால்கள் உடைந்து விழுகின்றன. ஒடிந்து விழுந்த கால்கள் இருந்த இடத்தில் பெரிய பனைமரம் போல கால்கள் முளைத்து வளர்கின்றது ஆடுகின்றேன். ஆடிக் கொண்டே இருக்கின்றேன் கைகள் இரண்டும் ஒடிந்து பறந்து செல்கின்றன. அவ்விடத்தில் தூண்கள் போல நிறைய கைகள் முளைத்தன. நான் விடும் மூச்சுக் காற்று அந்த வனத்தை அழித்து கொண்டிருக்கிறது. நான் வானுக்கும் மண்ணுக்கும் ஆக நிற்கிறேன். என் தாகத்திற்கு அனைத்து சமுத்திரத்தையும் குடித்து அவைகள் வறண்டு கிடக்கின்றன. என் தீ ஆட்டத்தை எந்த நீராலும் அடக்க முடியாது. அன்பினால் மட்டுமே அணைக்க முடியும். அதுவரை என் ஆட்டம் தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக